search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு முட்டைகள்"

    சத்துணவு ஊழல் பற்றி விசாரிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Eggnutritioncorruption #Mutharasan

    சென்னை:

    இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் செயல் படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்திற்காக சத்து மாவு, பருப்பு, முட்டை ஆகியவைகளை சப்ளை செய்து, திருச்செங்கோடு நகரத்திலிருந்து இயங்கக்கூடிய கிறிஸ்டி நிறுவனத்தில் ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை செய்து பல ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது.

    இந்த ஆவணங்களை பரிசோதித்ததில், இந்நிறுவனம் தமிழக அரசின் உயர் அதிகாரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் ஆட்சி பொறுப்பில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் ஆகியோருக்கு 2400 கோடி வரை லஞ்சம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஏற்கனவே பல ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளது. தமிழக ஆட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக அரசுத் துறைகள் அனைத்தும் லஞ்ச லாவண்யத்தில் மூழ்கிக்கிடக்கின்றது. இதன் உச்சகட்டமாக சத்துணவு திட்டமெகா ஊழல் அம்பலமாகியுள்ளது.

     


    இந்த மெகா ஊழல் பற்றி தமிழக அரசுக்கும் மத்திய விசாரணை முகமைக்கும் வருமான வரித்துறை கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகின்றது.

    ஊழல் மலிந்துபோன தமிழக அரசிற்கு தலைமையேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி ஊழல் புகார்களில் சிக்கியுள்ளதால் இந்த சத்துணவு திட்ட மெகா ஊழல் பற்றி சாரணைக்கு உத்தரவிட்டாலும் அது ஏமாற்று வேலையாகவே முடியும்.

    தமிழகத்தில் அதிமுக அரசில் நடைபெறும் ஊழலை விசாரிப்பதுபோல் விசாரித்து பின்பு அதை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசை மிரட்டி தன் அரசியல் லாபத்திற்கு பணியவைக்கும் வேலையை மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வருகின்றது.

    இந்த சத்துணவு மெகா ஊழல் வி‌ஷயத்திலாவது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Eggnutritioncorruption #Mutharasan

    கொடைக்கானலில் சத்துணவு முட்டைகளை கடத்திய பெண்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவிகளுக்கு மதிய உணவு சரிவர வழங்கப்படுவதில்லை என்றும், சத்துணவில் முட்டைகள் கிடைப்பதில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதனையடுத்து கடந்த 10 நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று மதியம் பள்ளிக்கு வந்த 2 பெண்கள் ஒரு அட்டைபெட்டியை தூக்கிக்கொண்டு வேகமாக வெளியே வந்தனர். இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அவர்களை கையும், களவுமாக பிடித்து அட்டைப்பெட்டியை பிரித்து பார்த்தனர். அதில் மாணவிகளுக்கு வழங்கவேண்டிய 210 சத்துணவு முட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர் சத்துணவு முட்டைகளை கடத்தி வந்த அமைப்பாளர் சாந்தி உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.




    அங்கன்வாடி, சத்துணவு மைய ஊழியர்களுக்கும், முட்டைகள் முறைகேடாக விற்பதற்கும் தொடர்பு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. #anganwadi #governmentschool
    நாமக்கல்:

    தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையம், அரசு பள்ளிகளில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டன. 2017- 18-ம் ஆண்டிற்கு ரூ.4.34-க்கு முட்டை வழங்க 3 தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டன.

    அவ்வாறு வழங்கப்படும் முட்டை ஒன்றின் எடை 45 முதல் 52 கிராம் நிகராமல் இருக்க வேண்டும். சராசரி 10 முட்டைகளின் எடை 445 கிராம் முதல் 525 கிராம் வரை இருக்க வேண்டும். அக்மார்க் தரத்தில் ஏ மீடியம் ரக முட்டைகளாகவும், சுத்தமாகவும், பாக்டீரியா மற்றும் கிருமிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளில் மாறுபாடு கண்டறியப்பட்டால் இரட்டிப்பு தொகை வழங்க வேண்டும் என இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு வழங்கப்படும் முட்டைகளில் முறைகேடு நடப்பதாக திடீரென புகார் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 3 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. அதில் சுமார் 1 கோடி முட்டைகள் கேரளா மாநிலத்திற்கு சென்று விடுகிறது.



    சுமார் 52 லட்சம் முட்டைகள் மதிய உணவு திட்டத்திற்காக அரசு வாங்குகிறது. மீதமுள்ள சுமார் 1½ கோடி முட்டைகள் தமிழக மக்களின் நுகர்வுக்காக செல்கிறது. இதில் சென்னையில் மட்டும் சுமார் 40 லட்சம் முட்டைகள் விற்பனையாகிறது.

    பொதுமக்களுக்கு விற்கப்படும் முட்டைகளில் இருந்து அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக சத்துணவு கூடங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் நீல நிறத்தில் சீல் வைத்து வழங்கப்படுகின்றன.

    சமீபகாலமாக அரசு முத்திரை வைக்கப்பட்டுள்ள சத்துணவு கூடங்களுக்கான முட்டைகள் வெளிசந்தைகளிலும், சில்லரை விற்பனை கடைகளிலும் தாராளமாக கிடைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. சத்துணவு மையங்களுக்கு வாங்கப்படும் முட்டைகள் எப்படி கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன என்பது பற்றி கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சத்துணவு மையங்களுக்கும், அங்கன்வாடி மையங்களுக்கும் தேவையான முட்டைகளை சப்ளை செய்ய திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    அதன்படி சராசரியாக 30 முதல் 40 கிராம் எடையுள்ள முட்டைகளை ஒரு ஆண்டுக்கு சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    வெளிசந்தைகளில் ஒரு முட்டையின் விலை ரூ.4.60 ஆக உள்ளது. ஆனால் ஒரு ஆண்டுக்கு சப்ளை செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் அந்த நிறுவனத்திடம் இருந்து அரசுக்கு ரூ.3.50க்கு முட்டை வாங்கப்படுகிறது. அந்த நிறுவனம் தினமும் ஒப்பந்தப்படி முட்டைகளை விநியோகித்து வருகிறது.

    அதன்பிறகு அந்த முட்டைகள் அங்கன்வாடி மையங்களுக்கும், சத்துணவு கூடங்களுக்கும் சென்ற பிறகு முறைகேடு நடப்பதாக தெரிய வந்துள்ளது. சில பள்ளிகளில் மாணவர்கள் சத்துணவு சாப்பிட வருவது குறைவாக இருக்கும். ஆனால் வருகை பதிவேட்டில் அதிகம் பேர் சாப்பிடுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கும்.

    அப்படி மிச்சமாகும் முட்டைகள் கடைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதாக கூறப்படுகிறது.

    இதுதவிர முட்டைகளை எடுத்துச் செல்லும்போது கணிசமான அளவு முட்டைகள் சேதம் ஆவது உண்டு. அந்த முட்டைகளையும் வெளியில் உள்ள கடைகளுக்கு கொடுத்து விடுவதாக கூறப்படுகிறது. சில இடங்களில் முட்டைகளில் வைக்கப்பட்டுள்ள அரசு முத்திரையை ரசாயனம் கொண்டு அழித்து விற்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    ஆனால் சென்னை உள்பட சில நகரங்களில் சமீபகாலமாக சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் சீல் அழிக்கப்படாமலேயே கடைகளுக்கு விற்பனைக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    முதல் கட்ட விசாரணையில் அங்கன்வாடி, சத்துணவு மைய ஊழியர்களுக்கும், முட்டைகள் முறைகேடாக விற்பதற்கும் தொடர்பு இருப்பது பற்றி தெரிய வந்துள்ளது.

    இதுபற்றி தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு இது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. உரிய ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் சத்துணவு முட்டைகளை வெளிசந்தைகளில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    அங்கன்வாடி மையம் மற்றும் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகள் அரசு ஒப்பந்தத்தில் நிர்ணயித்த முட்டையை காட்டிலும் புல்லட் எனப்படும் சிறிய அளவில் குறைந்த எடையில் முட்டைகள் வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் உடல் நலனுக்கு அரசு வழங்கும் முட்டையில் முறைகேடு செய்வதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    எனவே முட்டை வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடும் தனியார் ஒப்பந்ததார்கள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சின்ராஜ் கூறியது:-

    முட்டைகளை கோழிப் பண்ணையாளர்கள் நேரிடையாக கொடுத்தால் முட்டை சரியாக வழங்க முடியும். ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்தினர் முட்டைகளை குடோனில் வாங்கி பிறகு பள்ளிகளுக்கு முட்டை அனுப்புகின்றனர்.

    அப்படி வழங்கப்படும் முட்டைகள் சிறியதாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. வெளிமாநிலத்தில் சிறிய முட்டைகளை குறைவாக வாங்கி அவற்றை பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இதனை தவிர்க்க கோழிப்பண்ணையாளர்களுக்கு அரசு நேரிடையாக முட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #anganwadi #governmentschools #MidDayMealScam #MidDayMealEgg

    ×